பாடல் எண் : 88 - 8
நீடு நெஞ்சுள் நினைந்துகண் நீர்மல்கும்
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
மாடம் நீள்மரு கற்பெரு மான்வரில்
கூடு நீயென்று கூட லிழைக்குமே.
8
பொ-ரை: நெஞ்சுக்குள் நீள நினைந்து கண்ணீர் மல்கி ஓடும் மயக்கத்தினோடு இவ்வொண் தொடியணிந்த பெண், மாடங்கள் நீண்டுயர்ந்த மருகல் இறைவன் வரின் நீ கூடு என்று கூடல் இழைத்து வருந்துவாள்
. கு-ரை: நெஞ்சுள் நீடு நினைந்து என மாறுக. நெஞ்சுள் - மனத்தினுள். நீடு - நெடிதாக. கண் நீர் மல்கும் - கண்களிலிருந்து நீரைச்சிந்தும். ஓடும் - நீங்கத்தகும். மாலினோடு - மயக்கத்தோடு. ஒண்கொடி - ஒள்ளிய கொடி போன்ற. மாதராள் - தலைவி. மாடம் நீள் - மாடவீடுகள் நீண்டுள்ள. மருகற்பெருமான் வரில் - திருமருகலில் எழுந்தருளிய என் காதலனாகிய பெருமான் என்னைத் தேடி வருவானேயானால், நீ கூடு - நீ கூடுவாயாக. கூடலிழைக்கும் - கண்ணை மூடிக்கொண்டு தான் எண்ணிய காரியம் பலிக்குமா என்பதை அறிய வட்டமிட்டுப் பார்த்து. அக்கூடல் முனை இரண்டும் கூடின் பலிதம் என அறிவது, "ஆழிதிருத்திச் சுழிக்கணக்கோதி" (தி.8.திருக்கோவையார் 186).