பாடல் எண் : 89 - 1
ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை யோடும் உடுத்தது
ஒன்று வெண்தலை யேந்தியெம் உள்ளத்தே
ஒன்றி நின்றங் குறையு மொருவனே.
1
பொ-ரை: வெண்தலை ஒன்று ஏந்தி எம் உள்ளத்தே ஒன்றிநின்று அங்கு உறையும் ஒருவனாம் இறைவன் வெண் பிறையாகிய கண்ணி ஒன்று உடையவன்; உமையோடும் உடுத்தது ஒரு கிழிந்த கோவண உடை.
கு-ரை: கண்ணி - தலைமாலை. வெண்பிறையாகிய தலைமாலை ஒன்று. இடையிலணிந்தது ஓர் கோவணம் என்க. ஒன்று - பொருந்திய. கீள் - கோவணத்தொடு சேர்த்துக் கட்டப்படும் அரைநாண்துணி. உமையொடு கூடியவனாயிருந்தும் உடுத்தது கோவணத்தொடு கூடிய கீள் ஒன்றே என்க. வெண்தலை ஒன்றை என ஐயுருபு விரிக்க. ஒன்றி - பொருந்தி. ஏந்தி உள்ளத்து உறையும் ஒருவன் ஒன்றாகிய வெண்பிறைக் கண்ணியுடன் உடுத்தது ஓர் கோவணம் ஒன்றிய கீள் என வினை முடிவு காண்க.