பாடல் எண் : 89 - 2
இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில்
இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள்
இரண்டு மில்லிள மானெமை யாளுகந்
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே
.
2
பொ-ரை: அவர்க்கு உள்ளனவாகிச் செய்யுந்தொழில்கள் இரண்டு; அவர்க்கு உள்ளனவாகிய கோலங்கள் இரண்டு; எமை ஆளாகக்கொண்டு உகந்து இரவும் பகலும் என் சிந்தையுள் தங்கியிருக்கும்.
கு-ரை: அவர்க்கு - அப்பெருமானுக்கு. உள்ளன - இயல்பாக உள்ளனவாகிய. செய்தொழில் - செய்தொழில்கள். இரண்டு - பந்தம், வீடு. உயிர்கட்குப் பந்தம் வீடு என்றவற்றைச் செய்தல். கோலங்கள் இரண்டு - சிவம், சக்தி. இல் இளமான் - கங்கையும், உமையுமாகிய மனைவியர் இருவர். இரண்டு போது - நினைப்பு மறப்பு; பெத்தம் முத்தி; பகல் இரவு.