பாடல் எண் : 89 - 4
நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம்
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி
நாலு போலெம் அகத்துறை நாதனே
.
4
பொ-ரை: எம் உள்ளத்து உறையும் இறைவன் நான்கின் மேலும் ஒருமிகைமுகமாகிய பிரமனது ஐந்தாவது முகத்தைச் சினந்தவன்; நிலைபெற்ற ஆல நிழலில் நன்கு உணர்ந்திட்ட வேதங்கள் நான்கினை உடையவன்; இன்பமாகிய நான்கு வேதங்களையே குதிரைகளாகக் கொண்டவன்; நல்ல நெறி சரியை முதலிய நான்கு ஆகும்.
கு-ரை: நாலின்மேல் முகம் - பிரமனது நான்கு முகங்களுக்கும் அதிகமாய் நின்ற ஐந்தாம் முகம். செற்றது - கிள்ளியழித்தது. மன்நிழல் - கல்லாலின்கீழ் மன்னிய நிழல். நன்கு உணர்ந்திட்டது நாலும் - நன்கு உணரும்படிசெய்தது அறம், பொருள், இன்பம், வீடாகிய புருஷார்த்தங்கள் நான்குமாம். இன்பமாம் நாலுவேதம் - பேரின்பத்திற்கு வாயிலாகிய நான்கு வேதங்கள்; இருக்சு, யசுர், சாமம், அதர்வணம். சரித்தது - ஓதியருளியது. வேதம் உணர்த்திட்டது எனவும் சரித்தது நாலு நன்னெறி எனவும் கூட்டலாம். நன்னெறி நாலு - சரியை, கிரியை, யோக, ஞானங்கள். போல் அசை.