|
பொ-ரை: அலைகளை உடைய பெருங்கடல் பரவிய சிறப்பினதும், உலகெலாம் உள்ள நற்குணம் வாய்ந்த பெண்கள் வலங்கொள்ளும் மாண்பினதுமாகிய மறைக்காட்டில் உறையும் பெருமானை விரும்பி, எல்லோராலும் தியானிக்கப்படும் அவர் திருவடிகளை வாழ்த்த நம் பாவங்கள் கெடும். கு-ரை: "மறைக்காடரோ" என்பதும் பாடம். ஓதம் - வெள்ளப்பெருக்கு, பெருகியும் குறைந்தும் வரும் இயல்பு கடலுக்குரியது. பெருக்கத்தை ஓதம் என்பர். மால் கடல் - பெரிய கடல். பாவி - பாவிய என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. பாவிய - சூழ்ந்த. உலகெலாம் - திசை எல்லாம். (திருமறைக்காட்டைச் சூழக்கடல் உள்ளது என்பது கருத்து.) மறைக்காடரை என்பது பாடமாயின், மறைக்காடரை ஏத்த, உலகெலாம் காதல்செய்து கருதப்படும் அவர் பாதம் ஏத்த - எனத் தனித்தனி இயைத்துப் பொருள் கொள்க. இதில் "உலகு" என்பது உயர்ந்தோரை. "மற்றனைத்தையும் விட்டுச் சிவனொருவனே தியானிக்கத்தக்கவன்" என்று அதர்வசிகை கூறலின், (மறை உணர்ந்தோரால்) காதல் செய்து கருதப்படுமவர் என்றார். பறைதல் - கெடுதல் அல்லது நீங்குதல். |