பாடல் எண் : 9 - 2
பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி யார்தம்மை
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே.
2
பொ-றை: ஊர்க்குப் புறத்தே உள்ள நீரிலெல்லாம் தாழை பூப்பதும், ஆக்கம் பெருகியதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்கும் காண்டற்கரியீர்! உம் பணி செய்யிலன்றோ அடியார்களைத் தேவரீர் திருவருள் செய்தற்குத் திருவருள் நோக்கம் புரிந்தருள்வது! (பணிந்து பணிசெய்வார்க்கன்றி முதல்வன் அருள் கைகூடாது என்பது கருத்து)
கு-ரை: புறணி - உப்பங்கழிக்கரை. புறணியருகெலாம் பூக்கும் தாழையையுடைய மறைக்காடு என்க. ஆக்கம் - செல்வம். மா - சிறந்த. ஆர்க்கும் காண்பரியீராகிய நீர் நும் பணிசெய்யிலே, அவ்வடியார் தம்மை நோக்கிக் காண்பது செய்வீர் என்றியைத்துப் பொருள் காண்க. நோக்கிக் காண்பது - கருணையோடு பார்த்து அருள்செய்வது.