|
பொ-ரை: அருள் திருவுடையாரின் செல்வம் நிறைந்து விளங்கித் தோன்றும் விழாக்களால் அழகு பெற்றதும், நெஞ்சு நும்பால்மருவினார் வலம் செய்வதும் ஆகிய மறைக் காட்டுறையும் பெருமானே! நல்ல ஆழகிய உருவமுடைய உமை மங்கையை ஒரு பாகமாக மருவியதோடு, கங்கையைச் சடையிற் சூடியுள்ளது என்னையோ?கு-ரை: செல்வம்மல்கு திருவினார் - செல்வங்கள் நிறைந்த திருவினை உடையவர் எனினும் அமையும். உமை முதல்வனது திருவருளாகிய சிற்சத்தி; கங்கை இயற்கை எனப்படும் உலக முதற்பொருளின் சட ஆற்றலுக்கு ஓர் அடையாளம். முதல்வன் தன் சிற்சத்தியோடு பிரியாதுநின்று அதனைக் காரணமாகக் கொண்டு எவையும் செய்யவல்லன் என்பதும், இயற்கையாற்றல் அவன் ஒரு கூற்றில் அவன் விருப்பின்படி அடங்கியும் விரிந்தும் நிற்கும் என்பதும் இவ்வுண்மையாம். பெரிய நல்லடையாளத்தால் உணரத்தக்கவை என்பது கருத்து. |