பாடல் எண் : 9 - 8
சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லன லேந்த லழகிதே.
8
பொ-ரை: சங்குகளை அலைகள் கரையிலே கொண்டு வந்து உலவவிடும் கடற்கரைச் சோலையிடத்துக் கப்பல்கள் வந்து வலங்கொள்வனபோன்று வரிசைகொள்ளும் மறைக்காட்டுறையும் பெருமானே! தேவரீர் கங்கையைச் செஞ்சடையில் வைப்பதும் அன்றி, அகங்கையில் அனலையும் ஏந்தல் அழகியதேயோ?
கு-ரை: சங்கு வந்தலைக்கும் - ஊர்ந்து வரும் சங்குகளால் அலைக்கப்படும். தடங்கானல் - பெரிய கடற்கரைச் சோலை. வாய் - இடத்து. வங்கம் - கப்பல். இயற்கையின் மாறுபட்ட ஆற்றல்களைத் தன் பேராற்றலுள் அகப்படக்கொண்டு இணைத்து வேண்டியவாறு தொழிற்படுத்துவன் என்பதுகருத்து. உமையம்மைக்குத் தெரியாதபடி கங்கையை மறைத்துவைத்ததே தவறு; மேலும் இல்லை என்று உறுதி உரைப்பார்போலக் கையில் அனல் ஏந்தல் அழகாகுமா? என்பது நயம்.