பாடல் எண் : 90 - 10
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
10
பொ-ரை: விறகில் தீப்போலவும், பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன்; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்.
கு-ரை: விறகில் தீயின் -விறகின்கண் மறைந்திருக்கும் நெருப்பைப் போல. நன்பாலில்படு - நல்ல பாலில் மறைந்திருந்து பின்னர்த் தோன்றும். மாமணிச் சோதியான் - சிறந்த மணியின் கண் ஒளி மறைந்திருந்து சாணை பிடித்த பின்னர் வெளிப்படல் போல உள்ளத்துள்ளே மறைந்து நிற்பவன். உறவு - அறிவு, உணர்வு, அன்பு, மாறிக்கூறுவாருமுளர். அறிவாகிய கயிற்றினாலே. முறுகவாங்கிக் கடைய - நன்றாக இழுத்துக்கடைய. முன்னிற்கும் - நம்முன் தோன்றி அருளுவான். விறகு, பால், மணி இவற்றுள் மறைந்து நிற்கும் தீ முதலானவற்றை முறையே முறுகக் கடைதல், வாங்கிக் கடைதல், கடைதல் என்பனவற்றால் வெளிப்படுத்தலாம். அதுபோலப் பக்குவம் இல்லாதோர் பக்குவான்மா இவர்களுக்குக் கடவுள் தோன்றியருளும் வழி கூறப்பட்டது. கயிற்றினால் வாங்கிக் கடைதல் முன் இரண்டற்கும் பொது.