|
பொ-ரை: இறைவனுக்கு ஆளாகமாட்டார்; அவ்வாறு ஆளாகிய மெய்யடியார்களைச் சார்ந்து உய்யவும் மாட்டார். மீளா ஆளாய் மெய்ம்மையுள் நிற்கும் ஆற்றல் இல்லார்; அத்தகைய இழிந்தவர் செவிகள் துளையிட்டுப் பயன்படுத்தவியலாத செவியோ? அந்தோ! வீணே இறந்து மண்ணாகி ஒழிவர்! கு-ரை: ஆளாகார் - தாம் அடியவராக மாட்டார். 'ஆளா னார்க்கு. எனவும் பாடம். ஆளானாரை - இறைவன் திருவடிகளுக்கு அடிமை பூண்டாரை. அடைந்துய்யார் - அடியார்க்கு அடியராய் இருந்து உய்நெறிகாணார். மீளா ஆள் - என்றும் மாறாத அடிமைத் திறம். மெய்மையுள் - சத்தாகிய இறைவனது தன்மையின்கண், பிறழாது நிற்கும் இயல்பிலார். நில்லாத தொழும்பர் எனக்கூட்டுக. தோளாத சுரையோ - துளையிடப்படாத உட்குழியோ. தொழும்பர் - குற்றேவல் செய்வார். வாளா - பயன் அற்று. கழிவர் - கழிந்தொழிவர். தொழும்பர் - பெத்தம் முத்திநிலைகளிலும் அடிமையாகியே இருக்கும் உயிர். |