|
பொ-ரை: நாணமற்றவர்களே! துன்பம் மிக்க வாழ்வினைக் கொண்டு என்ன செய்வீர்? நீர் இறுதியில் சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு ஆன்றோர் சொற்களே சான்று. திருப்பாற்கடலினின்றெழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிவிடும். கு-ரை: நடலை - துன்பம். என்செய்திர் - உயிர்கட்குப் பயன்தரும் செயல்கள் என்செய்தீர்கள். நாணிலீர் - வெட்கம் இல்லாதவர்களே. சுடலை - இடுகாடு. சேர்வது - அடைவது, சொல் பிரமாணம் - சத்தப்பிரமாணத்தாலறிவதொன்றேயன்றி காட்சி அநுபவத்தாலும் அறிவதாம். உடலினார் - உடல். இழித்தற் பொருளில் வந்தது ஆர் விகுதி. ஊர்முனிபண்டம் - பிணம் என்று பேரிட்டு ஊர்மக்களால் வெறுக்கப்படும் பொருளாகும். கைவிட்டால் - காத்தலை நீங்கினால். |