|
பொ-ரை: விதியற்றவர்களே! குறிகளும், அடையாளமும், கோயிலும், நெறிகளும், அவ்விறைவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் வேதங்கள் கூறினும் உம் மனம் அவற்றுட் புகாதது என்னையோ? கு-ரை: குறிகளும் - கடவுள் திருவுருவங்களும், அடையாளம் - விடை கொடி முதலிய சின்னங்கள், விபூதி உருத்திராக்க சாதனங்கள். கோயிலும் - திருக்கோயில்களும், நெறிகளும் - சமயநெறிகளும். அல்லது சரியை கிரியை யோக ஞான நெறிகளும் என்க. அவர் நின்றதோர் நேர்மையும் - அப்பெருமான் இவற்றை நாம் உய்யும் நெறிகளாகக் காட்டி நின்றதொரு நடுநிலையையும். நேர்மை நுண்மை எனலுமாம். அறிய - எல்லாரும் அறிய. ஆயிரம் - பலவான. ஆரணம் - வேதங்களில் கூறிய உபதேசங்கள். ஓதிலும் - கூறினாலும். பொறியிலீர் - ஞானப்பொறி இல்லாதவர்களே. ஊழ் எனவுமாம். மனம் புகாதது என்கொல் - உங்கள் மனம் ஈடுபடாததற்குக் காரணம் என்ன. |