பாடல் எண் : 90 - 7
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே
.
7
பொ-ரை: தன்னை வாழ்த்துதற்கு வாயும், தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும், தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித்துதிக்காமல், வினையேன் நெடுங்காலம் வீழ்த்தியவாறு என்னே?
கு-ரை: மடநெஞ்சு - அறியாமையின் பாற்பட்ட மனம். தாழ்த்த - வணங்க. சென்னி - தலை. சூழ்த்த மாமலர் - ஆராய்ந்து எடுத்த சிறந்த மலர.் சூழ்ந்த -சூழ்த்த வலித்தல் விகாரம். துதியாதே - போற்றி வணங்காமல். வினையேன் - தீவினையேனாகிய நான.் நெடுங்காலம் - பலகாலம். வீழ்த்தவா - கழித்தேன். ஆ அது வருந்தத் தக்கது.