பாடல் எண் : 91 - 2
முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.
2
பொ-ரை: பழைய ஞான முதல் தனி வித்தும், பின்னை ஞானம் பிறங்கு சடையனும், என்னை இருள் நீக்கி ஞானத்தால் ஆண்டவனும் ஆகிய இறைவன் தன்னை ஞானமென்னும் தளையினால் பிணித்து உள்ளத்தே வைப்பேன்.
கு-ரை: முன்னை - பழமையான. ஞானமுதல் தனிவித்து - ஞானம் முளைத்தற்கிடமாயுள்ளவன். அறிவுக்கு முதற்காரணமாய வித்துப் போன்றவன். பின்னை - அதன்பின்னர். ஞானப்பிறங்கு சடையன் - அறிவு மயமான விளங்கிய சடைமுடியவன். என்னை - அடியனை. ஞானத்திருள் - அறிவை மறைத்துநிற்கும் அறியாமையாகிய இருட்டு. அறுத்து - நீக்கி. ஆண்டவன்தன்னை - ஆட்கொண்டவனை. ஞானத்தளையிட்டு - அறிவாகிய கயிற்றால் கட்டி.