பாடல் எண் : 92 - 6
வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.
6
பொ-ரை: வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந்திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும், தூபமும், மாலையும், தண்ணிய நறுவிய சாந்தமும், பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல்.
கு-ரை: வாமதேவன் - சிவன். சதாசிவமூர்த்தியாகிய இறைவனது வடக்கு நோக்கிய திருமுகம் வாமதேவமுகம் எனப்படும். வளநகர் - அவன் எழுந்தருளியகோயில். காமம் - சிவனடியன்றி வேறொன்றில் செல்லாத பற்று. ஒன்று - ஒன்றும். ஏமம் - திருநீற்றுக்காப்பு.