பாடல் எண் : 92 - 7
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நம தீச னடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.
7
பொ-ரை: படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே! நமது ஈசன் அடியரை அடையாதீர்; இடபத்தை ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக.
கு-ரை: படையும் - சூலமும். பாசமும் - காலபாசமும். பற்றிய - பிடித்த. கையினீர் - கையை உடையவர்களே. அடையன்மின் - அடையாதீர்கள். விடைகொள் ஊர்தியன் - இடபவாகனன். புடை புகாது - பக்கம் செல்லாது. போற்றியே போமின் - உங்களைப் பாதுகாத்துச் செல்லுங்கள். அவர்களை அணுகில் இயமனுக்கு நிகழ்ந்த தண்டனை அவர்கட்கும் கிடைக்கும் ஆதலால் போற்றிச் செல்லுங்கள் என்றார்.