பாடல் எண் : 93 - 7
கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச்
சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர்
விரும்பு மீசனை யான்மறக் கிற்பனே.
7
பொ-ரை: கரும்பும் கட்டியும் போல்வானும், வண்டுகள் சூழும் நறுமண மலர்களை அணிந்த சுடர்விடும் ஒளிக்குள் ஒளிஆகியவனும், அரும்புகளிற் பெரிய போதுகளைக் கொண்டு ஆய்மலரால் விரும்பும் இறைவனுமாகிய பெருமான் யான் மறக்கும் வல்லமை உடையேனோ?
கு-ரை: கட்டி - கரும்பின் கட்டியாகிய வெல்லம். கந்த மாமலர்ச் சுரும்பு - மணங்கமழும் மனத்தாமரை மலரின் அன்புத் தேனை நுகரும் வண்டு. சுடர்ச்சோதியுட் சோதி - விளங்கும் ஒளிக்குள் ஒளியாய்த் திகழ்பவன். அரும்பினில்பெரும்போது கொண்டு - அரும்புகளாக இருக்கும்போதே மலராவதன் முன்பே எடுக்கப்பட்ட பெரிய மலர்களை ஏற்றுக்கொண்டு. ஆய்மலர் விரும்பும் - அழகிய உள்ளத்தாமரைமலரை விரும்பும்.