பாடல் எண் : 93 - 9
புதிய பூவினை புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான் மறக் கிற்பனே.
9
பொ-ரை: புதிய பூவும், புண்ணியநாதனும், செல்வமும், நீதியும், முத்துக்குன்றும், அடைந்தோர்க்குக் கதியும், மதியும்,மைந்தனும் ஆகிய திருநீலகண்டமுடைய கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ?
கு-ரை: புதிய - அன்றலர்ந்த. நிதியை - பெறுதற்கரிய செல்வத்தை. நித்திலக் குன்றினை - திருநீற்றுப்பூச்சால் முத்துமலையை ஒப்ப வீற்றிருப்பவனை. கதியை - வீடுபேறான நற்கதியின் வடிவாயிருப்பவனை. மதியை - ஞான வடிவினனை.