பாடல் எண் : 95 - 1
புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
மிக்குக் காணலுற் றாரங் கிருவரே.
1
பொ-ரை: திருமாலும் பிரமனுமாகிய இருவரும் அழகுபொருந்திய ஒளிச்சுடர் நிறம் உடைய பெருமானைப் புகுந்து அணைந்து விரும்பி மலரிட்டு வணங்கிலராய், மகிழ்ந்து பொருந்தி மணமலர்களைக் கொய்து அருச்சித்திலராய் ஆணவமிகிந்து காண முயன்று காண்கிலராயினார்.
கு-ரை: புக்கணைந்து - இறைவன் இருக்குடத்தே உள்ளே புகுந்து நெருங்கி. புரிந்து - விரும்பி. அலர் - மலர். நக்கு - மனம் மகிழ்ந்து. அணைந்து - நந்தவனமடைந்து. நறுமலர் - மணமலர். சொக்கு - அழகு. மிக்கு - பிறரின் தருக்கால் மிக்கு. இருவர் - திருமால், பிரமன்.