பாடல் எண் : 95 - 3
ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.
3
பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலகங்களைக் காவல்கொள்ளும் கபாலியாகிய பெருமானின் திருவேடத்தைக் காணலுற்றார்கள், சாணநீரோடு, திருவலகும் கைகளிற் கொண்டு வணங்காதவராய்ப் பூக்கள் பெய்த கூடையைப் புனைந்து சுமந்திலர். முனைப்புடன் காணமுயன்று காண்கிலர் ஆயினார்.
கு-ரை: ஆப்பி - பசுவின் சாணம். அலகு - கூட்டுதல். திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல் ஆகிய சரியைத் தொண்டுகள். பூப்பெய்கூடை - பூக்கள் பறித்துப்பெய்து நிரப்பிய கூடை. புனைந்து - திருமாலை தொடுத்து. சுமந்திலர் - பெருமானுக்குச் சுமந்து செல்லாதவராயினர். காப்புக்கொள்ளி - காவல் மேற்கொண்டு. கபாலி தன் வேடத்தை - பிரம கபாலத்தைச் சுமந்துகொண்டு திரியும் பிக்ஷாடனரின் திருவுருவத்தை. ஓப்பிக்காணலுற்றார் - பாதுகாத்துக் காணத் தொடங்கினர். காப்பு - திருநீறு.