பாடல் எண் : 95 - 9
இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற் றாரங் கிருவரே.
9
பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் இளமையோடுகூடி எழுந்து கரிய குவளை மலர்களைப் பிளந்து இதழ்களால் பிணைத்துத் திருவடியில் இட்டு வணங்காதவராய் களவு செய்யும் தொழிலை உடைய காமனைக் காய்ந்த பெருமானது அளவினைக் காண முயன்று காண்கிலர் ஆயினார்.
கு-ரை: இளவெழுந்த - எழுந்த இளமைத்தன்மையோடு கூடி எழுந்த. இரும் - கரிய. பிளவுசெய்து - விரித்து. பிணைந்து - கட்டி. களவுசெய்தொழில் - காதலுணர்ச்சியைத் திருட்டுத் தனமாய்ச் செய்யும். காய்ந்தவன் - சினந்து எரித்தவன். அளவு - அடிமுடியின் அளவுகள்.