|
பொ-ரை: எந்தை பெருமானே! பூத்துச் செறிந்த கொன்றையினை உடையாய்; புலியின் தோலை ஆர்த்துக் கட்டினாய்; ஆடும் பாம்பினோடும் அனலோடும் ஆடும் கூத்தனே! நின் ஒலிக்கும் கழலே அல்லது எனது நா வேறு ஒன்றையும் ஏத்தாது. கு-ரை: பூத்தார் கொன்றையினாய் - மலர்ந்த கொன்றைப்பூ மாலையை அணிந்தவனே. அதள் - தோல். அரவோடு புலியின் அதள் ஆர்த்தாய் என்க. ஆர்த்தாய் - கட்டினாய். அனலாடிய - தீயேந்தியாடிய. குரையார் கழலேயலது - ஒலித்தலைப் பொருந்திய. திருவடிகளேயல்லாமல். ஏத்தா நா - துதியாத நாக்கு. எனக்கு - எனக்குள்ளது. |