பாடல் எண் : 96 - 7
வெப்பத் தின்மன மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடு மொண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மில னெந்தை பிரானிரே.
7
பொ-ரை: எந்தை பெருமானே! வெப்பத்தின் மனமாசு விளக்கும் செப்பம் உடைமையினால் "சிவன்" என்பவர் தீவினைகளை ஒப்பத் தீர்க்கும் ஒள்ளிய கழலை உடையானாகிய உமக்கல்லது வேறுபற்று இல்லேன்.
கு-ரை: வெப்பத்தின் - ஞானஒளி வெப்பத்தினாலே. மனமாசு - மனத்தின்கண் உளதாய அறியாமையாகிய இருளை. விளக்கிய - விளங்கச்செய்த. செப்பத்தால் - செம்மைத் தன்மையால். சிவன் என்பவர் - செம்மையன் என்று சொல்பவர். ஒப்ப - முடிய. ஒண் கழலாற் கலது - ஒள்ளிய வீரக்கழலை அணிந்த திருவடியை உடைய பெருமானிடத்தேயல்லாமல். எப்பற்றும் - வேறுஎவ்வித ஆசையும்.