பாடல் எண் : 97 - 10
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.
10
பொ-ரை: படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் தலைவன் அந்தணன் ( அழகும் குளிர்ச்சியும் உடையவன்) ஆண்பெண் வடிவமுடைய திருமேனியினன் மேன்மை மிகுந்த வெண் திருநீரு பூசிய கருமை கொண்ட திருக்கழுத்தினன் மான்குட்டி உடைய கையினன்.
கு-ரை: ஐயன் - அழகியன் அந்தணன் - குளிர்ந்த தண்ணளியைச் செய்பவன் மெய்யன் - உடலை உடையவன் மேதகு - மேன்மை பொருந்திய மைகொள் - கரிய நிறத்தைக் கொண்ட மான்மறி - மான்குட்டி பைகொள் பாம்பு - படத்தை உடைய பாம்பு அரை - இடையிலே ஆர்த்த - கட்டிய பரமன் - மேலானவன்.