பாடல் எண் : 97 - 20
இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த வுள்ளத் தவருணர் வார்களே.
20
பொ-ரை: கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் துறினைச் சொரிந்திடும் இயல்பினதும், பொருந்திய வாள்போன்றபாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர்.
கு-ரை: இணர்ந்து - கொத்துக்காளய் மலர்ந்து தாது - மகரந்தம் புணர்ந்த - கூடிய வாளரவம் - ஒளியோடு கூடிய பாம்பு அம்சடை அழகிய சடை.