பாடல் எண் : 97 - 24
மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்த ராயவர் காப்பினால்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெ யாக்கையை நீக்குவர் பேயரே.
24
பொ-ரை: கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும், மான்குட்டியை உடைய கையினரும், கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் அவ்வாறு புரியது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர்.
கு-ரை: மணிசெய் கண்டம் - நீலமணியின் நிறத்தைச் செய்யும் கழுத்து காப்பினால் - காத்தல் தொழில் மேற்கொண்டதால் பணிகள் - அடியார்களின் இருவினை நீக்கும் செயல்கள் பேயர் - சிவகணத்தார்.