பாடல் எண் : 97 - 28
இளமை கைவிட் டகறலு மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி யாயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே.
28
பொ-ரை: இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ளமெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாகயான் நினைப்பேன்.
கு-ரை: அகறலும் - நீங்கியதும் மூப்பினார் - முதுமையை உடையவராய் இகழ்ச்சி குறித்த பன்மை, வளமைபோய் - உடல்வளம் கெட்டு பிணியோடு - நோயோடு மதியாயினான் - அறிவின் வடிவமானவன். கிளமையே கிளையாக நினைப்பன் - அவ்வுறவையே உறவாக எண்ணுபவன்.