பாடல் எண் : 98 - 1
நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத்
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
1
பொ-ரை: திருநீறு நன்கு பூசப்பெற்ற ஒப்பற மேனியையும், ஒங்கிய சடையில் கங்கையாறு அலைவீச நின்று ஆடும் அமுதமும், தேனும் அதன் தெளிவும் அத்தெளிவுவாய்த்த ஊறல் போல்வானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
கு-ரை: நீறலைத்ததோர் மேனி - திருநீறு நிரம்பப்பூசிய திருமேனி நிமிர்சடை - கட்டி உயர்ந்த சடை ஆறு அலைக்க - கங்கையாறு அலைவீச அமுது - அமுதம் போன்றவன், தேறல் - தேன் - தெளிவு - தேனின் தெளிவு தெளிவாய்த்ததோர் - தெளிதல் பொருந்தியதொரு ஊறல் - ஊறிய தெளிந்த நீர்.