பாடல் எண் : 98 - 3
வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்
கள்ளத தைக்கழி யம்மன மொன்றிநின்
றுள்ளத் தில்லொளி யைக் கண்ட துள்ளமே.
3
பொ-ரை: இன்ப வெள்ளத்தாராகிய விஞ்சையர்கள் விரும்பும்படி கங்கைவெள்ளத்தைச் சடையில்வைத்த மேலோரை மனம் கள்ளத்தை நீங்க உள்ளம் ஒன்றியிருந்து உள்ளத்தில் ஒளியாகக் கண்டது.
கு-ரை: வெள்ளத்தார் - வெள்ளம்போல நிறைந்த கருணையை உடையவர். விஞ்சையார்கள் விரும்ப-வித்தியாதரர்கள் விரும்ப வெள்ளத்தை - கங்கையை கள்ளத்தைக் கழிய - ஆணவம் நீங்க.