பாடல் எண் : 98 - 9
தேச னைத்திரு மால்பிர மன்செயும்
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
9
பொ-ரை: ஒளி உடையவனும், திருமாலும், பிரமனும் செய்யும் பூசனைகள் பொருந்தினால் அங்குப் பொருந்துகின்ற விருப்பம் உடையவனும், நெஞ்சுக்குள் நிறைவாகி நின்ற ஈசனுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
கு-ரை: தேசு - ஒளி. பூசனைபுணரில் - வழிபாடு கூடினால் புணர்வாயதோர் - நம்மோடு கலந்து நிற்பதொரு. நேசன் - அன்பன்.