பாடல் எண் : 99 - 1
பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.
1
பொ-ரை: பாவமும் பழியும் ஆகிய பற்றுக்கள் அறுதலை விரும்புபவர்களே! பஞ்சகவ்வியம் உகந்து திருவபிடேகம் கொள்ளும் அப்பெருமான் கழலை மகிழ்ந்து மேவுபவராய் நினைவீராக; காத்து ஆள்வோனாகிய இறைவன் கலந்து அருள் செய்வான்.
கு-ரை: பாவமும் பழி பற்று - பாவமும் பழி பற்றியிருத்தலும். அற - நீங்க. வேண்டுவீர் - விரும்புகின்றவர்களே. ஆவில் அஞ்சு - பசுவிடம் உண்டாவனவாய பஞ்சகவ்வியம். உகந்து - மகிழ்ந்து. ஆடும் -அபிடேகம் கொள்ளும். கழல் - திருவடிகளை. மேவராய் - விரும்புபவராய். உள்குமின் - நினையுங்கள். காவலாளன் - காத்தல் செய்பவனாய அப்பரமன். கலந்து - நம்மோடு உடனாய் நின்று.