பாடல் எண் :1072
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.

2
பொ-ரை: அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின்.
கு-ரை: வழிபாட்டுக்கு மலர் எடுக்குங்கால் அரும்புகளை நீக்கிமலர்களை மட்டும் பறித்தல்வேண்டும் என்பது விதி. "அரும் போடு மலர் பறித்திட்டுண்ணா ஊரும்............காடே" "அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து" என ஆசிரியரே அரும்புகளைப் பறித்து வழிபடுதலை உணர்த்தினார். இது விதி விரோதமெனத் தோன்றும். பூவினங்களுள் எல்லாவற்றின் அரும்புகளும் வழிபாட்டிற்காகா எனபதில்லை; தாமரை முதலிய சிலவற்றின் அரும்பு ஆகும். அரும்பு என்பது அடையின்றி நிற்குங்கால் தாமரை அரும்பிற்கே பொருந்துகிறது. "அருப்பினார்முலை மங்கை பங்கினன்" (தி.2.ப.25.பா.8.) "அரும்புங் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக் கரும்பின் மொழியாள்" (தி.1.ப.46.பா.2.) "அருப்புப் போல் முலையார்" (தி.5.ப.61.பா.5.) எனபவற்றால் அறிக. "அரும்பார்ந்தன மல்லிகை சண்பகம்" (தி.7.ப.13.பா.4.) என்புழி ஏனைய அரும்புகளை உணர்த்தல் கான்க. "வைகறை யுணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயுங்கட்டி, மொய்மலர் நெருங்கு வாச நந்தன வனத்துமுன்னிக்கையினிற் றெரிந்து நல்ல கமழ் முகையலரும் வேலைத் தெய்வநாயகற்குச்சாத்துந் திருப்பள்ளித் தாமங்கொய்து" (தி.12. எறிபத்.9) என்றதால் போதுகளைக் கொய்தல் விதியென்பதும் அவற்றையே அரும்பு என்பதும் உணரக் கிடக்கின்றன. அறுதல் - அற்றம். செறுதல் - செற்றம். அற்றப்பட - நீக்கம்உற. ஆய் மலர் - வினைத்தொகை. அரும்புகளையும், அற்றப் பட ஆய்ந்த மலர்களையும் கொண்டு எனக்கூறலும் ஆம். அற்றப் படுதல் ஆய்தற்கு அடையாய்க் குற்றம் நீங்கல் எனப் பொருள் தரும். `விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல்ழு எனும் குறளி (1186)லும் இப் பொருட்டாதலறிக. சுரும்பு - வண்டினங்களுள் ஒன்று. "வண்டும் சுரும்பும் மூசும்தேனார் பூங்கோதாய்" (சிந்தா. 2065) கரும்பற்றச்சிலை :- அற்றம் - அழிவு. சோர்வு, துன்பம், மெலிவு, சிலை - வில். கரும்பு வில் காதலை விளைத்து இவற்றையெல்லாம் ஆக்குதலால் அற்றச்சிலை எனப் பட்டது. அற்றச்சிலை - அற்றத்தை உடைய சிலை என இரண்டன் உருபும் பயனும் உடன்தொக்கதொகை எனக்கொண்டு தனக்கே அழிவு தந்த சிலையாதலின் கரும்பு அற்றச்சிலைக்காமன் என்றார் எனக்கூறலுமாம். பெரும்பற்றப்புலியூர் - புலிக்கால் முனிவர்க்குப் பேரின்பத்தில் பெரும்பற்றை விளைத்ததாலும், அவர் வீடுபேற்றிற் பெரும் பற்றுடையராயிருந்ததாலும், வணங்கும் எல்லா உயிர்க்கும் சிவனடி நீழலில் பெரும்பற்று விளைத்தலாலும் அப்பெயர் பெற்றது.
அன்பினால் தூவுக; தூவின் அவாவறுத்து வீடுபேறு எய்தலாம் என்னும் கருத்தைக் காமனைக் காய்ந்தவன் எனும் தொடர் குறிப்பிக்கின்றது.