|
பாடல் எண் :1078 | விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக் கண்நி றைந்த கடிபொழி லம்பலத் துள்நி றைந்துநின் றாடு மொருவனே. |
| 8 | பொ-ரை: யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்டற்கு அரிதாய், ஆகாயத்தையளாவியெழுந்த சோதிப்பிழம்பு ஒப்பற்ற பெருந்தலைவனாய், தேனிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய் நிறைந்து பஞ்சகிருத்திய நடனத்தைச் செய்யும். தொழக்கல்லாதவர்களாகிய அயன்மாலுக்கு அரிய முதல்வன் அன்பால் வழிபட்டவியாக்கிரர், பதஞ்சலியார் என்னும் முனிவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றித் தன்னியல்பை உணர்த்திப் பேரின்பம் அருளினன் என்றபடி. கு-ரை: இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை (அப். தி.5.ப.95) பார்க்க. `விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லையிலாதானேழு (தி.8 திருவாச. சிவ.) எண் - எண்ணம். கண் நிறைந்த - கள் நிறைந்த. ஞானமன்றில் ஆனந்தக் கூத்தாடுதலின் நிறைந்து நின்றாடும் என்றார். சிவபிரானை ஒருவன் என்றல் உபநிடத வழக்கு. முழுமுதல் என்னுங் கருத்தை உடையது. (வடமொழி சுலோகம்) `ஒருவன் என்றேத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோழு எனநம்மாழ்வாரும் இக்கருத்தை வலியுறுத்துதல் காண்க. `ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோழு எனத்திருத்தாண்டகத்தினும் அருளிச்செய்வர். |
|