பாடல் எண் :1082
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.

1
பொ-ரை: பனைபோன்ற கையையும், மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன்; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன்; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன். இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ!
கு-ரை: பனைக்கை - பனைமரம் போன்ற கரிய பரிய கை. வேழம் - கயாசுரன் என்னும் யானை. இறைவனது எண்வகை வீரச்செயல்களுள் யானையை உரித்துப் போர்த்ததும் ஒன்று. வேடம் அனைத்தும் என்றது போக யோக வேக வடிவங்களை. `பலபல வேடமாகும் பரன்ழு (சம்பந்.) நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் - `உள்ளம் பெருங்கோயில்ழு (தி.10 திருமந்திரம்.) வாயிலார்செய்த அக வழிபாட்டின் சிறப்பைப் பெரியபுராணத்துக் காண்க. அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்து அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின் என்பது `மலர்மிசை ஏகினான்ழு என்ற திருக்குறட் பகுதிக்குப் பரிமேலழகர் உரைத்த விளக்கம். தினை - சிறுமைக்குக் காட்டுவதோர் அளவை; கணப்பொழுதும் மறவேன் என்றது, மறந்தால் உய்யேன் என்பது உணர்த்தியது. இந்நிலை கடவுளை உள்ளவாறு உணர்ந்து அநுபவித்தார்க்கே உளதாவது.