பாடல் எண் :1090
காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கைம ணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ

9
பொ-ரை; கார்காலத்துப் பூக்கும் கொன்றை மாலையனை,கச்சணிந்த தனங்களை உடைய உமைகேள்வனை, தேர் உலாவும் தில்லையுள் கூத்தப்பெருமானை, உண்ணத்தெவிட்டாத அமுது போல் வானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
கு-ரை; கார்காலத்து மலர்கின்ற பூவாதலின் காருலாமலர்க் கொன்றை என்றார்.'கண்ணி கார்நறுங் கொன்றை `(புறநானூறு.) காருலாமலர்க் கொன்றை-கார் உலாவுகின்ற காலத்துப் பூத்த கொன்றை மலர்.தார்-போகமாலை; உயிர்களுக்குப் போகம் நிகழ்தற் பொருட்டுக் கார்காலத்து மலரும் கொன்றைத்தாரணிந்து உமையொரு பாகங்கொண்டு போகியாயிருப்பன் என்க. `போகம் ஈன்ற புண்ணியன்ழு என்றார் தேவரும். வார்-கச்சு. தேருலாவிய தில்லையுட் கூத்தன் - தேருலாவிய கூத்தன், தில்லையுள் கூத்தன்.நடராசப் பெருமான் திருவிழாக்காலங்களில் ஏனைய நாள்களில் உலாவராது, தேர்த் திருநாள் மட்டிலுமே உலாவருவதைக் குறித்ததுமாம்.