|
பாடல் எண் :1091 | ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம் வீங்கி விம்முற வூன்றிய தாளினான் தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப் பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ. |
| 10 | பொ-ரை: உயர்ந்த திருக்கயிலாயத்திருமலையை எடுக்கலுற்ற இராவணன் சிரங்கள் பருத்து விம்முதல் அடைய ஊன்றிய திருவடி உடையவனும் நீர்வளம் சான்ற தில்லையுட் கூத்துனும் ஆகிய பெருமானை நல்ல சார்பில்லாத தொண்டனேன் மறந்து உய்தலுங்கூடுமோ. கு-ரை:ஓங்குமால்வரை - ஊழிதோறூழி முற்றும் உயர்ந்து நிற்கும் மலைகளில் தலையாகிய திருக்கயிலாயம். தலையாய மலையெடுத்த தகவிலோன் (அப்பர்.தி.6.ப.97.பா.10.) ஏந்தலுற்றான் - எடுக்க விரும்பியவன். சிரம் - தலைகள். நீர்தேங்கு வயல் என மாறுக. பாங்கு - நற்சார்பு. உரிமை, கிழமை என்றலும் ஆம். |
|