பாடல் எண் :1094
ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரும் அறிகிலா
ஆறொப் பானை யரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

3
பொ-ரை:நாம்தொழுவது ஏறு ஒப்பானும், எல்லா உயிர்க்கும் இறைவனாகச் சிறந்து நிற்பானும், தேவரும் அறியாநெறி ஒப்பானும், அரத்துறைத் தலத்தை மேவிய உறுபொருளாவானுமாகிய பெருமானையே.
கு-ரை: ஏறு ஒப்பானை என்றது பீடு (பெருமை) உடைமை பற்றி. இறைவேறு ஒப்பான் - எல்லா உயிர்கட்கும் தனியிறைவனாக இருப்பவன். ஆறு - நெறி; தன்னை அடைந்தாரைத் தூய்மைசெய்து இன்புறுத்துதல் பற்றியும், உவகை ஊட்டுதல் பற்றியும், ஆற்றை (நதியை) ஒப்பவன் என உரைப்பினும் அமையும். தேவர் அறிகிலா என்பது முதல்வனுக்கு அடை; ஆற்றிற்கு அன்று. ஊறு - உறுவது; தான் என்றும் உளன் ஆயினும் அறியாமை நீங்கப்பெற்ற பின்னரே உயிர்கள் தன்னை உணர்தலின், அவ்வுணர்வுக்குப் பின்வந்துற்ற பொருள் போல்வான் என்பது கருத்து.