பாடல் எண் :1095
பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை யிளமதி சூடிய
அரப்பொப் பானை யரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

4
பொ-ரை: நாம் தொழுவது திருவரத்துறையை விரும்பி எழுந்தருளியவனும் பிறை சூடியவனுமாகிய பகல் ஒளியின் பரப்பையும், இருளில் நன்மைபுரியும் வளர்மதியின் வளர்ச்சியினையும், குறும்பையும், அன்புகாரணமாக உண்டாகும் பாலின் சுரத்தலையும் ஒக்கும் முதல்வனையே, பிறரை அன்று.
கு-ரை: பகலது பரப்பு ஒப்பானை என்க. பகல்- பகலின் கண்ணதாகிய பேரொளி. ஞாயிற்றின் ஒளியைப்போலப் பேருணர்வாய் யாங்கணும் நிறைந்தோன் என்றபடி. இரப்பு - இரத்தலால் வரும் வளர்ச்சி அல்லது ஆக்கம்; அஃது ஒருங்கே நிகழாது முறையாய் நிகழும். இருள்நல் நிலாவின் வளர்ச்சி (இரப்பு) ஒப்பானை என்க. உயிர்களது அறிவின்கண் உள்ள இருளைப் படிமுறையான் அகற்றிச் சிவஞானத்தை மேல்ஓங்கி வளரச்செய்பவன் என்றபடி. `பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனேழு என்னும் (தி.8) திருவாசகத்தின் கருத்தும் இது. பாரித்தல் - வளர்த்தல்; `பண்பின்மை பாரிக்கும் நோய்ழு என்னும் திருக்குறள் (851) காண்க. அரப்பு - அரம்பு - குறும்பு. (விளையாட்டு) அரப்பு ஒப்பானை - தான் செய்யும் செயல்களை விளையாட்டுப்போல எளிதில் செய்வோனை. அரும்பு எனினுமாம்.
சுரப்பு ஒப்பானை - சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சாத்திய மந்திரங்களால் வழிபடும் யோகியர்க்குக் கறந்தபோது வெளிப்படும் பால் போல வெளிப்பட்டு அருள்பவனை; மெய்யன்பால் வழிபடும் சிவஞானிகளுக்குத் தலையீற்றுப் பசு கன்றை நினைத்த போது பாலைச் சுரக்குமாறு போல, அவர் வேண்டும் போதெல்லாம் வெளிப்பட்டருள்வன் - எனச் சாத்திரம் ஓதுமாறு அவரவர் கருத்து வகைபற்றித் தாழ்த்தும் விரைந்தும் வெளிப்படும் வகையைக் குறிப்பித்தபடி.