பாடல் எண் :1098
புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை யரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

7
பொ-ரை: நாம் தொழுவது புனலும், பொருந்தாதார்க்கு மின்னலும். அனலும் போல்வானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும் அரத்துறைத் தலத்துக் கனல் போன்றவனுமாகிய பெருமானையே.
கு-ரை: புனல் ஒப்பான் - தண்ணீர் எப்பொருளையும் வளர்த்தல் போல, உயிர்தோறும் நின்று அவற்றின் அறிவை வளர்த்து வருவோன்; `மருவிய உயிரும் வளர்ப்போன் காண்கழு என்பது தி.8 திருவாசகம். பொருந்தலர் தம்மை மினல் ஒப்பானை - பகைவர்க்கு இடிபோன்றவனை; உருபு மயக்கம். மின் என்பது இங்கு அதனோடுடன் நிகழும் இடியை உணர்த்திற்று. `செறுநர்த் தேய்க்கும் செல்லுறழ் தடக்கைழு என்பது தி.11திருமுருகாற்றுப்படை அனல் - சுழன்று எரியும் தீ. இஃது இறைவன் திருமேனிக்கு உவமையாயிற்று. கனல் - மூளாத் தீ; உயிர்தோறும் கரந்து நின்று அவற்றின் அறியாமையைத் தேய்த்து ஓங்கிவளரும் பேருணர் வாய் நிற்றல்பற்றி முதல்வனுக்கு இஃது உவமையாயிற்று. `மூளாத் தீப் போல் உள்ளே கனன்றுழு (சுந்தரர்) (தி.7.ப.95.பா.1) எனும் ஆட்சி காண்க. கன்னல் எனினும் அமையும்; இன்பப் பொருளாய் அநுபவப்படுவன் என்பது இதன் கருத்து.