பாடல் எண் :1101
கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை யரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

10
பொ-ரை: நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும், மலையெடுக்கலுற்ற இராவணனை மணி முடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும், அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே.
கு-ரை: கலையொப்பான் - கலிப்பது கலை; கலித்தல் - நீக்குதல், செலுத்துதல்; மக்களது அறியாமையை நீக்கி, அவர் தம் அறிவை நல்லதன்கண் உய்ப்பது கலை. அதுபோல முதல்வன் உயிர்களின் அகவிருள் நீக்கி அவற்றின் அறிவைப் போகத்தினும் வீட்டினும் செலுத்துபவன். ஓர் அமுது - ஒப்பற்ற அமுது; கற்றாரால் தனக்கு உவமையில்லாதது எனத் துணியப்படும் அமுது. ஓர்த்து உணரப்படும் அமுது என வினைத்தொகையாக்கினும் அமையும். மலையொப்பானை - உலகிற்கு அச்சாக, எல்லா வளங்களையும் தன்பாற் கொண்டு துளக்கமின்றி இருப்பது மலை. முதல்வனும் இத்தன்மையன் என்றபடி நிலையொப்பானை-முதல்வன் கடல்போன்று அளக்கவாராத கடந்த நிலையினன் ஆயினும், அது நீந்தவல்லார்க்கு அலைத்து ஆடுதற்குக் கைவந்து நின்றாற்போலத் தானும் அன்பர்களுக்கு நிலைத்துநின்று இன்புறும்படி ஆனந்தத்தை மிகக்கொடுப்பவன் என்பது கருத்து.
இத்திருப்பதிகம் முதல்வன் வணக்கத்திற்கு உரியன் என்னும் முதன்மைக் கருத்தைப் பொற்சரடுபோல் பாடல்தோறும் ஊடுருவப் பெற்று, பல்வேறு அரிய இனிய உவமைகளால் அவன்றன் குறைவிலா மங்கலக் குணங்களைக் கோவை செய்து ஞானத்தால் தொழுவார்க்குத் தரப்பட்ட மணிமாலையாகத் திகழ்தல் அறியத்தக்கது.