பாடல் எண் :1103
வான னைம்மதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மறந் துய்வனோ.

2
பொ-ரை: வானத்துள்ளவனும், பிறைசூடிய பேராற்றல் உடையவனும், தேனென இனிப்பவனும், திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும், பன்றிக்கொம்பை அணிந்தவனும், இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் எய்த விடையேறுடையவனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
கு-ரை: வானன் - பரமஆகாசம் எனப்படும் சிவலோகத்துள்ளான்; இதுவே உயிர்களின் உள்ளங்களில் சிற்றம்பலமாக உள்ளது. பொதுவாக ஆகாயத்தை வடிவாகக் கொண்டவன் எனினும் அமையும். மைந்தன் - வலியன். தேனன் - தேன் போலும் இனியன். ஏனன் - ஏனத்தின் கோட்டை மார்பில் அணிந்தவன். ஏனம் - திருமாலாகிய ஆதிவராகம். ஆனன் - ஆனை (விடையை) ஊர்தியாக உடையவன்.