பாடல் எண் :1109
கருவி னைக்கடல் வாய்விட முண்டவெம்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ.

8
பொ-ரை: கருவாயிருந்து காப்பவனும், கடலெழு நஞ்சு உண்ட எம்திருவாகியவனும், திருவண்ணாமலை வடிவினனும், உருவத்திருமேனி உடையவனும் உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், அருவத்திருமேனி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
கு-ரை: கருவினை - உலகெலாமாகி வேறாய் உடனுமாய் நிற்போன் ஆகலின், உயிர்கள் தோன்றுங்கால் அவ்வக்கருவின் கண் அவ்வவ்வுயிர்களை அவ்வவற்றின் வினைக்கீடாக விழச்செய்து அவற்றின் உடம்பையும் கரணங்களையும் ஆண்டைக்குப் பொருந்தும் நுகர்ச்சிகளையும் தந்து வளர்ப்போன் என முதல்வனைக் குறிப்பித்தருளினார். இனி உலக முதற்காரணமாகிய மாயைக்குத்தான் தாரக மாய் நின்று தனது சத்திசங்கற்பத்தால் உலகைத் தோற்றுவித்தல்பற்றி முதல்வனைக் கரு என்றார் எனினும் அமையும். `ஓங்காரத்தொருவன் காண். உலகுக்கெல்லாம் வித்தவன்காண்ழு (தி.6.ப.48.பா.4.) என சுவாமிகள் பின் அருளிச்செய்தல் காண்க. `தத் ஆத்மாநம் அகுருதழு (அதுதன்னைத் தானே ஆக்கியது) என்னும் தைத்திரீய உரைக்கும் இதுவே கருத்து என்க.
கடல்வாய்விடம் - கடலாகிய இடத்து எழுந்த ஆலகாலம்; வாய் - இடம். `திருநீலகண்டம்ழு தன்னை எண்ணுவார்க்குத் துயர் அனைத்தும் நீக்கி வீடு பயப்பிப்பதாதலின், அத்திரு அடையாளமுள்ள முதல்வன் திருவுரு மெய்யுணர்ந்தோரால் விரும்பப்படுவது என்னும் கருத்தால் `கடல்வாய்விடம் உண்ட எம் திருவினைழு என்றார். `ஓம் நீல கண்டாய நமழு என்னும் எட்டெழுத்தை நவில்வார் மீளப்பிறவார் எனக் காஞ்சிப் புராணம் (சிவபுண்ணியப்படலம்) கூறுகிறது. திருநீலகண்டத் திருப்பதிகம் ஒருவரைப் பிறந்த பிறவியிற் பேணி முதல்வன் கழல் அடையச்செய்யும் என அதன் திருக்கடைக் காப்புக் குறித்தல் காண்க.
அருவம், அருவுருவம், உருவம் என்னும் நிலைகளைக் கடந்த முதல்வன் உயிர்கள் தன்னை உணர்ந்து உய்யக் கருதி அத்திருமேனிகளை மேற்கொண்டான் ஆகலின், உருவினை எனவும் அருவினை எனவும் அருளிச்செய்தார். உரு - மகேச்சுரத் திருவுருவங்கள்; அரு - யோகியர் பிரணவம், பிராசாதம் முதலிய மந்திரங்களின் துணையால் அகத்தே காணும் ஒளியுரு. அருவுரு - ஐம்பெரு மனுக்களாலும், திருவைந்தெழுத்தாலும் அமையும் மந்திரத் திருமேனி.