|
பாடல் எண் :1110 | அருத்த னையர வைந்தலை நாகத்தைத் திருத்த னைத்திரு வண்ணா மலையனைக் கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த அருத்த னையடி யேன்மறந் துய்வனோ. |
| 9 | பொ-ரை: பொருள் வடிவாயுள்ளவனும், ஐந்தலையுடைய நாகத்தைத் திருந்த அணிந்தவனும், திருவண்ணாமலை வடிவினனும், தலைவனானவனும், தீக்குணங்களைக் கடியாதார் புரங்கள் மூன்றையும் எய்தவனும், உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப்போனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங்கூடுமோ. கு-ரை: அருத்தன் - நாற்பேறுகளின் இரண்டாவது பேறாகிய பொருளாயிருப்பவன் சொற்பொருளாயிருப்பவன் எனினும் மெய்ப்பொருள் எனப் பேசப்படுபவன் எனினும் பொருந்தும். `கற்றநூற் கருத்தும்நீ அருத்தம் இன்பம் என்றிவை முற்றும்நீழு (தி.3.ப.52.பா.3). `பொன்னானாய் மணியானாய் போகமானாய் பூமிமேல் புகழ்தக்க பொருளேழு.(அப்பர்) என்னும் திருமுறை உரைகள் காண்க. அரவைந்தலைநாகம் - முன் பின்னாகத்தொக்க இருபெயரொட்டு. ஐந்தலைநாகமாகிய அரவு என்க. திருத்தன் - திருந்த அணிந்தவன். கருத்தன் - தலைவன், தன்வயம் உடையோன். `சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான், இனிச் சங்காரமே முதல்ழு என்றது (சிவஞான போதம். 1.3.) கடியார் - கடிதல் நீக்குதல், தீமையைக் கடிந்து ஒழுகாத அசுரர் என்றபடி. அருத்தன் - அருத்துவோன், நுகர்விப்போன் (வினைப்பயனை என்பது அவாய் நிலையான் வந்தது). புரமூன்றெய்த அருத்தன் என அடுத்து நின்றமையின். எய்தது வினைப்பயன் நுகர்வித்தற்கு எனக்கொள்க. சுதன்மன், சுபுத்தி. சுசீலன் என்போரைக் கொண்டது அந்நியதிபற்றி. |
|