|
பாடல் எண் :1111 | அரக்க னையல றவ்விர லூன்றிய திருத்த னைத்திரு வண்ணா மலையனை இரக்க மாயென் உடலுறு நோய்களைத் துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ. |
| 10 | பொ-ரை: இராவணன் அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றிய திருத்தமானவனும். திருவண்ணாமலை வடிவினனும், இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.கு-ரை: அரக்கன் - இராவணன், அலற - வாய்விட்டு அரற்றும்படி. திருத்தன் - மாறுபடாதவன், செய்யன், திருந்தும்படி செய்தவன் எனினும் பொருந்தும்; என்னை? செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றான் அரக்கன் ஆகலின். இரக்கமாய் - இரங்கியருளி உடலுறு நோய் ஒன்றேயாயினும் அதனால் பெற்ற வருத்தம் பலவகைப் பட்டமையின் நோய்களை என்றார். துரக்கன் - துரத்தியவன். உடலுறு நோய்களைத் - துரக்கனை என்பது பாடமாயின், உடலில் உற்ற சூலைநோயைக் களைந்த உரக்கனை எனப் பிரிக்க. உரக்கன் - வலிமையுள்ளோன்; தன்நிலை திரியாதவன். என் உடல் உறு நோயை இரக்கமாய்க் களைந்த என்றமையின் நோய் பிறநெறி சார்ந்தமை பற்றி உற்றதென்பதும், அதனைச் சிவபிரான் இரக்கம் (கருணை) காரணமாகவே அதன் மூலத்தோடு களைந்தருளினான் என்பதும் பெறப்படுதல் காண்க. `மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப் பெற்றால் - வெந்தறும் வினையும்நோயும் வெவ்வழல் விறகிட்டன்றேழு என்ற இடத்தும் நோய் அதன் காரணமாகிய வினையுடன் ஒருங்கே வெந்து அறும் என்றமை காண்க. |
|