பாடல் எண் :1113
பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்குமண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.

2
பொ-ரை: மனைகளிலிடும் பலிக்கெனப் பெற்றம் ஏறும் பெருமான், தனக்குச் சுற்றமாமெனும் உமையம்மையோடும் வருவார். துயர்தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைதொழுவார். நல்ல தவத்தோடு ஞானநெறியில் பிறழாது இருக்கப்பெறுவர்.
கு-ரை: பெய்பலிக்குப் பெற்றம் ஏறுவர் என்று புராணங்களால் கூறப்படும் பெருமான் தொல்புகழாளொடும் அதிட்டித்து (இடமாகக் கொண்டு) நின்று அற்றம் தீர்க்கும் அண்ணாமலை என்க. தீர்க்கும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது. முதல்வனுக்கு மூர்த்தமும் இடமே ஆகலின்.
சுற்றமாமிகுதல் - வாழ்க்கைத்துணை எனும்படி மேம்படுதல். தொல்புகழ் - "சர்வம் சக்திமயம் ஜகத்" "அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை எல்லாம்" (சித்தி. சுபக்கம். 69 ) என உணர்த்தப்படும் பொருள் சேர்புகழ். (தி.1.ப.10.பா.11) "உமையாளொடும் உடனாகிய ஒருவன் - பெண்ணாகிய பெருமான் மலை" என அருளிச்செய்ததும் காண்க.
அற்றம் - துன்பம். கைதொழ - நற்றவத்தொடு ஞானத் திருப்பரே - என்றது கையால் தொழுவோர் சீவன்முத்தராயின் சரியை கிரியை யோகங்களோடு கூடிய ஞானநெறிக்கண் பிறழாது நிற்கப்பெறுவர் எனவும், ஏனையராயின், நற்றவத்தினால் ஞானத்தைத் தலைப்படுவர் எனவும் இரட்டுறமொழிய நின்றது.