|
பாடல் எண் :1114 | பல்லி லோடுகை யேந்திப் பலவி(ல்)லம் ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர் அல்லல் தீர்க்குமண் ணாமலை கைதொழ நல்ல வாயின நம்மை யடையுமே. |
| 3 | பொ-ரை: பல்லில்லாத மண்டை யோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் விரைந்து சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை அவர்தம் உள்ளங்களோடு கவர்வாராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ, நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும். கு-ரை: பல்லில்லோடு - பற்கள் உதிர்ந்த மண்டையோடு. ஒல்லை - விரைவு. உணங்கல் - உலரவைத்த பண்டங்களாகிய உணவுப் பொருள்கள். கவர்வார் - முனிவர்தம் மனைவியரை உணவு வேண்டும் எனக்கேட்டு, அவர்தம் உள்ளங்களையும் அணிகலன்களையும் அவரறியாமே கவர்ந்தவர். அல்லல் - துன்பம். நல்லவாயின - நன்மைகள் எல்லாம் நம்மை அடையும் - நாம் முயல்வதின்றித் தாமே வந்து அடையும்; முதல்வனைத் தொழும் நம்மைத் தொழுதல் காரணமாக. |
|