பாடல் எண் :1115
பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.

4
பொ-ரை: பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் ஓடிப்போய்விட்டனராதலால் செய்வது இனி என்னை? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ நம் மேலை (பழைய) வினைகள் ஓடிப்போகும். (`ஓடிப் போயினர் செய்வதொன்றென்கொலோழு எனப் பேசநின்ற பெருமானது திருவண்ணாமலை - என இசையெச்சம் கொண்டு முடிக்க)
கு-ரை: பாடிச்சென்று - பிச்சையேற்றற்குப் பாடல்களைப் பாடிக்கொண்டு சென்று. பலிக்கு - பிச்சைக்கு. ஓடிப்போயினர் - பிச்சைக்கு என்று வந்தவர் (உள்ளங்களைக் கவர்ந்துகொண்டு) ஓடிப்போயினார். முதல் இரண்டடிகள் தாருகாவனத்துப் பெண்டிர் கூற்று. இவ்வாறு கூறும்படி ஆடல்புரிந்த பெருமானது திருவண்ணாமலையை ஆடியும் பாடியும் கையால் தொழ என இயைக்க.