பாடல் எண் :1118
கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னனண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

7
பொ-ரை: சேர்த்துக் கட்டிய கொண்டையரும், வேடம் முன்கொண்டவரும் தாளத்திற்கேற்ப நட்டங்கள் ஆடுபவரும் ஆணிப் பொன் போன்றவரும் ஆகிய பரமனார் திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால் நம்மிடம் வருதற்குப் பேணி நின்ற பெருவினைகள் போகும்.
கு-ரை: கோணிக்கொண்டை - சேர்த்துக்கட்டிய சடைக்கொண்டை. வேடம் முன்கொண்டவர் - முன்னர்ப் பலபல வடிவங்களோடு விளங்கியவர். பாணி நட்டங்கள் - தாளம் இயைந்த பரதவேறு பாடுகள். ஆணிப்பொன் - மாற்றுரைத்துப் பார்ப்பதற்கு மாதிரியாக வைத்திருக்கும் சுத்தமான பொன், இங்கே பெருமானை ஆணிப்பொன் என்றார். `ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற தாணுவைழு (தி.5.ப.2.பா.4) என்றார் முன்னும். பேணிநின்ற - நம்மைக் குறித்து வருகின்ற. முதல் இரண்டடிகளுக்கு நாணத்தால் வளைந்து முன்னர்ப் பெண்டிர் வேடத்தைக் கொண்டவராகிய திருமால் உடன்வரப் பாணியோடு கூடிய நட்டங்கள் ஆடும் பரமனார் என உரைப்பினும் அமையும். கொண்டையர் வேடம் - மோகினி நிலை. திருமால் மோகினியாக வரத்தாம் பிட்சாடனராகச் சென்றார் என்பது புராணம்.