பாடல் எண் :1122
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்தொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்ச லென்னுமா ரூரனே.

1
பொ-ரை: மூன்று பொழுதினும் பிரமன் தொழ நின்றவனும், புகழ்ந்து போற்றத்தக்க செம்பொன்னின் வண்ணமேனி உடையவனும், உயிர் உடம்பைவிட்டு நீங்கும் அப்போதைக்கு அஞ்சல் என்று அபயங் கொடுப்பவனுமாகிய சிவபெருமானை எப்போதும் சிறுபொழுதும் நீர் மறவாது இருக்க. (சே - போதும் எனப்பிரித்து விடையின்மீது இவர்ந்து வரும் எனினும் அமையும்)கு-ரை: எப்போதும் - இரவு பகல் எந்தநேரத்தும், துன்பக்காலத்தேயன்றி இன்பக்காலத்தும் எனலுமாம். இறையும் - கணப்போதும். முப்போதும் - காலம் மூன்றினும். செப்போதும் பொன் - சிவந்தபொன், சிவப்பு செப்பு என மருவிற்று. செம்பொன் மேனியன் என்றபடி. அப்போதைக்கு - இயமன் கால பாசத்தை வீசியெறிந்து தன் அன்பரை அழைக்கும் அப்போதின்கண். அஞ்சல் என்னும் - (அலமந்தபோது) அஞ்சவேண்டா என்று கூறும்.