பாடல் எண் :1132
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆடலுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பரா ரூரரே.

1
பொ-ரை; கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி ஆகிய வாச்சியங்களைக் கொண்டு இசைந்து மருங்கிலே நின்று பிளந்துவாயை உடைய பல பூதங்கள் ஆடாநிற்ப ஆடுங்கூத்தராய் அக்குமணிகளையும் அரவையும் பூண்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.
கு-ரை; கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி முதலியன இறைவனது திருக்கூத்திற்கு முழங்கும் பக்கவாச்சியங்கள். பகுவாயன - திறந்தவாயை உடையனவாகிய. ஒக்க ஆடல் உகந்து - ஒருசேர அவைகளும் தன்னோடு ஆடுதலை விரும்பி. உடன் - அவற்றோடு. கூத்தராய் - சங்காரதாண்டவராய். அக்கு - சங்குமணி. ஆர்ப்பர் - கட்டுவர்.